துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்கலேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே அவரது பதவிக் காலம் நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், கிரெக் பார்க்கலே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஐசிசியில் மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய்ஷாவுக்கு உள்ளதாக கூறப்படும் நிலையில் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐசிசியின் தலைவராக ஜெய்ஷாவை நியமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.