ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி.
தற்போது 43 வயதை தாண்டிய போதும் தோனி தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும் கால் மூட்டு வலி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சீசனில் தோனி பேட்டிங் செய்வதை அரிதாக காண முடிந்தது. விக்கெட் கீப்பிங்கில் மட்டும் முழுக் கவனம் செலுத்திய தோனி, தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டு விளையாடினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற விதி இருப்பதால் தோனியை அந்த பிரிவில் மாற்ற சென்னை அனி நிர்வாகம் திட்டமிட்டது. மேலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தோனி முடிவெடுத்ததாக தகவல் கூறப்பட்டது.
மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளான வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதி ஊதியத்தை குறைத்துக் கொள்ளும் விதி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன்படி தோனியை இம்பேக்ட் வீரராக எடுத்துக் கொள்ள சென்னை அணி பிசிசிஐயை நாடியது.