ஐதராபாத்:2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்பது தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
மொத்தம் உள்ள 10 அணிகளும் சேர்த்து 46 வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன. வீரர்கள் தக்கவைப்புக்காக பத்து அணிகளும் 558 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை செலவழித்து உள்ளன. இந்த 46 வீரர்களில் தோனி உள்பட 10 இந்திய வீரர்கள் அன்கேப்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
எப்போது ஏலம்?:
பல அணிகள் பல நட்சத்திர வீரர்களை விடுவித்து உள்ளது. குறிப்பாக ஒரு சில அணிகளில் கேப்டன்களே கழற்றி விடப்பட்டனர். 2024 ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர், கிளென் மேக்ஸ்வெல், ஏய்டன் மார்க்கரம், கே.எல். ராகுல், ரிஷப் பன்ட், பாப் டுபிளசிஸ் போன்ற வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த முறை மெகா ஏலத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கான தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த விக்கெட் கீப்பர் யார்?:
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும். தீபாவளி விடுமுறையை முடித்துவிட்டு தற்போது ஒவ்வொரு அணிகளும் மாதிரி ஏலம் நடத்தி எந்த வீரர்களை எப்படி வாங்க வேண்டும்.
ஏலத்தில் எந்த யுக்தியை பயன்படுத்த வேண்டும் என்ற பார்முலாவை வகுத்து வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை தோனிக்கு பிறகு அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பதை இந்த ஏலத்திலேயே முடிவு செய்ய அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த வீரர்கள் தங்களுடைய பெயரை ஏலத்திற்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய அடிப்படை விலை என்ன என்பதை பிசிசிஐ வரும் நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:"ஓரங்கட்டப்படுவீர்கள்..." 4 சீனியர் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை! யார் யார் தெரியுமா?