சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதும், அதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் பாதுகாப்பாகச் செல்ல 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இதுவரை 13,830 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு 7,59,048 பேர் பயணம் செய்துள்ளதாகவும், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கடந்தாண்டைக் காட்டிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்தாண்டு அரசு பேருந்துகளை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்துகளின் இயக்கங்கள் குறித்தும், பயணிகளுக்காக செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "பொங்கல் பண்டிக்கைக்காக கடந்த 10-ம் தேதி இயக்கப்பட்ட 3,406 பேருந்துகளில் 1,87,330 பயணிகளும், 11ஆம் தேதி இயக்கப்பட்ட 4,107 பேருந்துகளில் 2,25,885 பயணிகளும், 12ஆம் தேதி இயக்கப்பட்ட 3,950 பேருந்துகளில் 2,27,250 பயணிகளும், ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, இயக்கப்பட்ட 2,367 பேருந்துகளில் 1,18,583 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 13,830 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு 7,59,048 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட அதிகமான பயணிகள் இந்த ஆண்டு பயணம் செய்துள்ளனர். அதாவது, கூடுதலாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் விடுமுறை.. 4 நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளை பொதுமக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்தி உள்ளனர். கடந்த தீபாவளி பண்டிகையின் போது தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கியதால், அரசின் மற்ற கார்ப்பரேஷன் பேருந்துகளை எடுத்து இயக்குவது தேவை இல்லாமல் போனது, அதேபோல தான் இந்த பொங்கல் பண்டிகையிலும் நடந்துள்ளது.
கடந்த 2012 முதல் சென்னை மாநகர பேருந்துகளை எடுத்து இயக்கி வந்த நிலையில், இந்தாண்டு முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போலவே இயங்கி வருகிறது. பொங்கல் முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 15 முதல் ஜனவரி 19 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்.