சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றக்கோரி காவலர் பக்ரூதின் அளித்த மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் பக்ருதீனை மதுரை சிறைக்கு மாற்றக் கோரி, அவரது தாய் செய்யது மீரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தற்போது தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன், சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும், சிறைத்துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத மாநகராட்சி ஆணையர்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஜன.13) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், காவலர் பக்ரூதினுக்கு ஏற்கனவே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், சிறை மாற்றம் செய்வது குறித்து அளிக்கப்பட்ட மனு பரிசீலனையில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, அந்த மனு மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.