புதுக்கோட்டை: மெய்வழிச்சாலை கிராமத்தில் உள்ள பொன்னுரங்க தேவாலயத்தில் சாதி, சமூக மத பாகுபாடுகளை கடந்து, 69 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, ஒரே இடத்தில் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை பகுதியில் இந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைத்து மதம் மற்றும் அனைத்து சாதியினரும் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் பல பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும், தை திருநாளான முதல் நாளில் ஊருக்கு மத்தியில் 69 சமூகங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து பொங்கள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் திமிறிப் பாயும் காளைகள்! பகல் நிலவரம் என்ன?
மெய்வழிச்சாலையில் வசித்து வருபவர்கள் அனந்தர்கள் என்றும், பிரம்ம குலத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கொண்டாடும் பொங்கலுக்கு பிரம்ம பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற மெய்வழிச்சாலையில் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி, 124 ஆவது வருடமாக 69 சமூகத்தை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் வரிசையாக பொங்கல் பானைகள் வைத்து பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டு கொண்டாடியுள்ளார்.
இது குறித்து பொங்கல் கொண்டாடிய குணசேகரன் கூறுகையில், “ இன்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து, சாதி, மத பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்து பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். இங்கு வைக்கப்படும் பொங்கல்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். இதில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.