கிருஷ்ணகிரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க வேண்டுமென, ஓசூரில் வசிக்கும் ஐ.டி. பணியாளரான லூகஸ் என்பவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக அவர் 3 லட்சத்திற்கும் அதிகமான மொசைக் காகிதங்களை கொண்டு, 133 சதுர அடியில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்தடிசம்பர் 30 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு ரூ.37 கோடி செலவில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க வலியுறுத்தி, ஓசூரில் வசிக்கும் லூகஸ் என்பவர் 3 லட்சத்திற்கும் அதிகமான மொசைக் காகிதங்களை கொண்டு, 133 சதுர அடியில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட லூகஸ், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மீது தனி ஆர்வம் கொண்ட இவர், திருவள்ளுவர் தினத்தன்று பல்வேறு விழிப்புணர்வுகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஜான் பென்னிகுயிக் 184-வது பிறந்த நாள்...பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்!
முன்னதாக, 1,330 திருக்குறள்களை ஐஸ் குச்சிகளில் எழுதி சாதனைப் படைத்துள்ளார். அதேபோல், மொசைக் காகிதங்களை பயன்படுத்தி கலைஞர் உருவம் பதித்த நாணயத்தை வடிவமைத்துள்ளார். மேலும், இஸ்ரோ விஞ்ஞானி சிவனின் உருவத்தை வடிவமைத்து வித்தியாசமான முயற்சிகளால் விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க வலியுறுத்தி, திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 3 லட்சத்திற்கும் அதிகமான மொசைக் காகிதங்களை கொண்டு, 133 சதுர அடியில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து லூகஸ் கூறுகையில், “தினமும் வேலையை முடித்துவிட்டு 4 மணிநேரம் செலவிட்டு, கடந்த 3 மாதங்களாக மொசைக் காகிதங்களில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்துள்ளேன். கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க வலியுறுத்தி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளேன்." என்று லூகஸ் கூறினார்.