விசாகப்பட்டினம்: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 31) ஏற்கனவே ஒரு போட்டி நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பிருத்வி ஷா நல்ல தொடக்கத்தையே அளித்தனர். அதிரடியான ஆட்டத்தைக் கையாண்ட வார்னர் அணி 93 ரன்களில் இருந்த நிலையில், 52 ரன்களில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து பிருத்வி ஷா 43, மிட்செல் மார்ஸ் 18, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 என ஆட்டமிழந்தனர். ஆனால், மறுமுனையில் இருந்த ரிஷப் பண்ட் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மெல்ல மெல்ல அதிரடியை தொடங்கினார். இதனால் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 51 ரன்களை எட்டினார்.
இறுதியில் டெல்லி அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பாக, பதிரான 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மற்ற பந்து வீச்சாளர்களான முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:GT Vs SRH: குஜராத் அசத்தல் வெற்றி! மில்லர், சாய் சுதர்சன் அபாரம்! ஐதராபாத்துக்கு திடீர் சறுக்கல்! - IPL GT Vs SRH Result