அகமதாபாத்:ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதர அணிகள் வெளியேறிவிட்டன.
இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டமான குவாலிபையர் 1ல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஹைதராபாத் அணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொருத்தவரையில், அந்த அணி 14 லீக் ஆட்டங்களில் 8ல் வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அதே வெற்றி முனைப்புடன் குவாலிபையரில் களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அந்த அணிக்கு அபாரமான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் கூடுதல் பலமாக உள்ளனர். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்துக்கின்றனர்.
கொல்கத்தா அணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொருத்தவரையில், அந்த அணி 14 லீக் போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடைசி இரு லீக் ஆட்டங்களுமே மழையால் பந்து வீச்சின்றி தடைப்பட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பு அந்த அணிக்கு ஓய்வு கிடைத்தாலும் அதுவே அந்த அணிக்கு பெரிய சவாலாக இருக்கும்.
பேட்டிங்கில் ஃபில் சால்ட் மற்றும் சுனில் நரைன் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து வந்தனர். தற்போது டி20 உலக கோப்பை போட்டிக்காக ஃபில் சால்ட் அவரது தாய் நாடான இங்கிலாந்துக்கு திரும்பியுள்ளார். அவரது இடத்தை நிரப்புவது அந்த அணியின் முக்கிய பணியாகும்.
இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரசல், நிதீஷ் ராணா ஆகியோர் அணிக்கு ரன்கள் சேர்க்கும் வகையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வருன் சக்கரவர்த்தி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.