கொல்கத்தா:ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி, கொல்கத்தாவின் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் 130 ரன்களை தாண்டுமா என்ற நிலையில் டெல்லி இருந்தது. ஆனால், குல்தீப் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால் 153 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. 26 பந்துகளை எதிர் கொண்ட குல்தீப் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் என 36 ரன்கள் எடுத்தார்.
4 ஓவர்கள் பந்து வீசிய கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல், ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே டெல்லி அணி பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய பில் சால்ட் அரைசதம் கடந்தார். மறுமுனையில் 15 ரன்கள் எடுத்த சுனில் நரேன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிங்கு 11 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், வில்லியம்ஸ் வீசிய பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சால்ட் 68 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயஸ் 33 ரன்கள், வெங்கடேஷ் 26 ரன்கள் எடுத்தனர். இதனால் 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பில் 157 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 3 தோல்வி 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் தொடர்கிறது. அதேபோல், 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 6 தோல்விகள், 5 வெற்றிகள் என புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பைக்கு தகுதியானவர் நடராஜன்: முத்தையா முரளிதரன் கருத்து!