சென்னை:நடப்பு ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ரஹானே-ருதுராஜ் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரஹானே 1 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய மிட்செல் 11 ரன்களுக்கும், ஜடேஜா 16 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
இதன் பின்னர் களமிறங்கிய ஷிவன் துபே - கேப்டன் ருதுராஜ்வுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதில் 27 பந்துகளை எதிர்கொண்ட துபே 7 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் கடைசிவரை களத்தில் இருந்த ருதுராஜ் பொறுப்புடன் விளையாடி சதம் விளாசினார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களுடனும், தோனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 210 ரன்கள் எடுத்த வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது லக்னோ.
அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக குயீண்டன் டி காக் - ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் 16 ரன்களுக்கு அவுட் அகி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே பவுலர்களை பொளந்து கட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்தநிலையில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் நிக்கோலஸ் பூரன்.
மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் சதம் விளாசியதுடன், கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124 ரன்களுடனும், தீபக் ஹூடா17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு முன்னேறியது லக்னோ. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4ல் வெற்றி 4ல் தோல்வி என புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் களைகட்டிய ஐபிஎல் சூதாட்டம்! ரூ.3.29 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள் பறிமுதல்! கும்பல் சிக்கியது எப்படி?