டெல்லி:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் முதல் 4 இடங்களை பிடிக்கும் அந்த அணி யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கப்படவுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் வலுவான அணியாகத் திகழ்ந்து வருகிறது.
10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 8ல் வெற்றி, 2ல் தோல்வி என 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 6-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதே போல் நிகர ரன்ரேட் -0.442 ஆக உள்ளது. இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும்.
இதனால் இன்றைய போட்டியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டெல்லி. அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன , இதில் 15 முறை ராஜஸ்தான் அணியும், 13 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன. `பிளே-ஆஃப்' சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் ராஜஸ்தான் அணியும், அதனை தக்க வைக்கும் முனைப்பில் உள்ள டெல்லி அணியும் இன்று களம் காண்கிறது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க:பார்முக்கு திரும்பிய பாண்டியா..பேட்டை சுழற்றிய சூர்யா..ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!