சென்னை:நடப்பு ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்மேன்களாக ஃபில் சால்ட் - சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபில் சால்ட் (0) டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து கைக்கோர்த்த சுனில் நரைன் - ரகுவன்ஷி ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பவர் பிளே வரை கொல்கத்தா அணிக்கு சாதகமாக இருந்ந்த களம், அதன் பிறகு சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியது. போட்டியின் 6வது ஓவரை வீசிய ஜடேஜா, அந்த ஓவரில் ரகுவன்ஷி (24), நரைன்(27) ஆகியேரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரியதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்து வீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவீந்திரா அதிரடியாக ஆடத்தொடங்கிய போது, 15 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல் 1 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்த நிலையில், 25 ரன்களுக்கு சுனில் நரைன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே, அதிராடிய விளையாடி 18 பந்துகளில் 28 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். மறுமுறையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினார்.
இதனால் 17.4 ஓவரில் இலக்கை எட்டி கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசிவரை களத்திலிருந்த ருதுராஜ் 58 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் விளாசினார். தோனி 1 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தோனி களமிறங்கியதும் ரசிகர்கள் தோனி..தோனி எனக் கோஷமிட்டு ஆர்ப்பரித்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் வரும் ஏப்.14ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை, அதன் சொந்த மைதானமான வான்கடேவில் எதிர்கொள்கின்றது. இதனால், இரு அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:CSK vs KKR: ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச் பிடித்து ரவீந்திர ஜடேஜா சாதனை!