கொழும்பு:இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் இந்தியா 3-க்கு 0 என்ற கணக்கில் தொடரை வென்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.2) நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆக.4) நடைபெறுகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக இலங்கை நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகப் போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வனிந்து ஹசரங்கா அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் வனிந்து ஹசரங்கா எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக 34வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரீ வண்டர்சே இலங்கை அணியில் இணைவார் எனக் கூறப்படுகிறது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10வது ஓவரின் கடைசி பந்தை வீசிய போது இடது கால் தொடை பகுதியில் ஹசரங்காவுக்கு தசைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது காயம் உறுதி செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் காயம் காரணமாக விலகும் 9வது வீரர் ஹசரங்கா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தில்ஷன் மதுசன்கா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக மத்தீஸ பத்திரனா ஆகியோர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
மேலும், துஸ்மந்த சமீரா, நுவன் துஷாரா ஆகியோரும் காயம் காரணமாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக விலகினர். வீரர்கள் காயம் இலங்கை அணிக்கு கடும் சவாலாக அமைந்து உள்ளது. இருப்பினும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் வேட்கையுடன் இலங்கை களமிறங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இதையும் படிங்க:ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு டபுள் டமாக்கா! நீரஜ் சோப்ராவுடன் போட்டி போடும் மற்றொரு இந்திய வீரர்! - Paris Olympics 2024