பாரிஸ்:பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் வரை நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 10,500 வீரர் வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் சார்பில் 16 விதமான போட்டிகளில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று 10மீ ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது. இந்த சுற்றில் முதல் 8 இடங்களை பெறுபவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் பங்கேற்றனர். இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை இழந்தனர். அடுத்ததாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக மனுபாக்கர் மற்றும் ரிதம் சிங்வான் ஆகியோர் களமிறங்கினர்.
இவர்களில் ரிதம் சங்வான் 573 புள்ளிகள் பெற்றதால் 15வது இடத்தை மட்டுமே அவரால் பெற முடிந்தது. இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர் இழந்தார். இருப்பினும், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த மனு பாக்கர் 60 ஷாட்டுகள் கொண்ட தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தில் போட்டியை நிறைவு செய்தார். மனு பாக்கர் மொத்தம் ஆறு தொடரின் முறையே 97, 97, 98, 96, 96 மற்றும் 96 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைப்பெற்ற 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் தென்கொரியாவை சேர்ந்த யே ஜின் கிம் 243.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அடுத்ததாக மற்றொரு தென்கொரிய வீராங்கனை கிம் 241.4 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
குவியும் வாழ்த்து:இந்தியாவிற்காக பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ள மனு பாக்கருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.