ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை பெர்த் மைதானத்தில் வைத்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக வரும் 30ஆம் தேதி இந்திய ஏ அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய நபர் தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வேறு யாருமில்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எனக் கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக கவுதம் கம்பீர் நாடு திரும்ப உள்ளதாகவும், 2வது டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இலங்கையில் ஒருநாள் தொடரை கோட்டைவிட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரை முற்றிலுமாக இழந்து ஒயிட் வாஷ் ஆனது. அடுத்தடுத்த தோல்விகளால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீரை அகற்றும் நிலை உருவானது.
இந்த நிலையில், தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே முதலாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது. இதனால் கவுதம் கம்பீரின் தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையுடன் போனது. இருப்பினும், மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்தே கவுதம் கம்பீரின் தலைமை பயிற்சியாளர் பதவி தப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே கிளிக்.. 10 ஐபிஎல் அணிகளின் ஒட்டுமொத்த ஜாதகமும் இங்கே இருக்கு!