நீலகிரி: உதகையில் சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோயில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பூக்கள் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு சில இடங்களில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக சென்று நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் மற்றும் பேருந்துகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பாட்டில்கள் கொண்டு வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று ஊட்டி ஆலம்ஸ் அவுஸ் சாலையில் உபயோகம் இல்லாத வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் கதவை உடைத்து அலுவலகத்திற்குள் புகுந்த கரடி!
இதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உதகையில் பதுக்கி வைத்திருந்த கடைக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.