புதுடெல்லி: பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் தன்னை டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள சிறைகளைத் தவிர வேறெதாவதொரு சிறைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (பிப்.18) நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த இதே போன்ற மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருப்பதை சுட்டிக்காட்டியது. மேலும், ''உங்களிடம் (சுகேஷ் சந்திரசேகர்) செலவு செய்ய பணம் இருக்கிறது அதனால் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். இது சட்ட நடைமுறையின் துஷ்பிரயோகம். ஒரே மனுவை எப்படி நீங்கள் தொடர்ந்து தாக்கல் செய்ய முடியும்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷோப் ஆலம், ''அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் மனுதாரரை அவரது குடும்பத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்காமல் இருக்க உரிமை உண்டு. எனவே கர்நாடகாவிலோ அல்லது அதற்கு அருகாமையில் உள்ள சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட வேண்டும்'' என நீதிபதிகளை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானின் அஜ்மீரில் மூன்றாம் பாலினத்தவர் கருத்தரங்கு!
அதற்கு நீதிபதிகள், ''சமூகம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும் நீதிமன்றம் கவலை கொள்கிறது. மற்றவர்களுடைய செலவில் உங்களது அடிப்படை உரிமைகளை அமல்படுத்த முடியாது. அதிகாரிகள் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பாருங்கள். மனுதாரர் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் நிராகரித்தனர்.
முன்னதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பரபரப்பு புகார் கொடுத்திருந்தார். அதில், தன்னிடம் இருந்து ரூ.10 கோடியை சத்யேந்திர ஜெயின் மிரட்டி வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருக்கு எதிரான புகார்களை திரும்பபெறக் கோரி இரண்டு கேமராக்கள் மூலம் தன்னை கண்காணித்து அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.