சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம் எனவும், இனியும் பொறுமையாக இருக்கமாட்டோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி நாமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூகநீதிக் கூட்டமைப்பு கட்சிகள் ஒன்றிணைந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்று சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தூங்குவது போல் நடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை எழுப்புவது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். கட்டடங்களை மட்டும் கட்டுவது வளர்ச்சியல்ல, மக்கள் முன்னேற்றம் தான் உண்மையான வளர்ச்சி.
தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 20, 2025
இந்நிகழ்ச்சியில் பாமக கெளரவ தலைவர்… pic.twitter.com/2Tgap2QGvc
சாதிவாரி கணக்கெடுப்பு:
சமூக நல திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம். அனைத்து சமூகங்களையும் வளர வைக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மனசாட்சி இல்லை. தற்போது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரும்.
இதையும் படிங்க: கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள 'சாதி' நீக்கப்படுமா? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! |
1931 பிறகு இதுவரை சாதிவாரி, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டும் இதுவரை தமிழ்நாடு அரசு அதை செய்யவில்லை. தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டம் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
இனியும் பொறுமையாக இருக்கமாட்டோம்:
அவ்வாறு, பட்ஜெட் கூட்டத்தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லையென்றால், அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார். இனியும் பொறுமையாக இருக்கமாட்டோம், இது எங்கள் உரிமை. திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்துள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.200 முதல் 300 கோடிதான் செலவாகும்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளி வந்தால் அனைத்து சாதியினரும் தேர்தலில் சீட்டு கேட்பார்கள் என்பதால் கணக்கெடுக்க விடாமல் தடுக்கின்றனர். தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடஒதுக்கீடு அனைத்து சாதிக்கும் கிடைக்க வேண்டும்." என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.