ஐதராபாத்: அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடரை நடத்த தேவையான பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கறாராக தெரிவித்துள்ளது.
இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பையை நடத்த முடியாத சூழல் நிலவும் நிலையில், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதேநேரம், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தானை பல்வேறு வகைகளில் சரிகட்ட ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கும் பட்சத்தில் பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை வழங்குவதாக ஐசிசி உத்தரவாதம் அளித்ததாக தகவல் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் நிதிச் சலுகைகளை அதிகரிப்பதாக ஐசிசி சலுகை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து ஐசிசி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்படி ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் பட்சத்தில், துபாயில் வைத்து கோப்பைக்கான போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஐசிசி குழு பாகிஸ்தான் செல்ல உள்ளது. அதேநேரம், இஸ்லாமாபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதவரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தூதுக் குழுவின் பயணம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அவசரமாக நாடு திரும்பும் இந்திய அணியின் முக்கிய நபர்! ஆஸ்திரேலியா தொடரில் திடீர் மாற்றம்?