ஸ்ரீநகர்: 30 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்துக்குப் பிறகு முதன் முறையாக காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிரந்தரமாக குடியிருக்க விரும்பும் வகையில் ஸ்ரீநகரில் வீட்டு வசதி சங்கத்தை பதிவு செய்து அரசிடம் ஏற்ற விலையில் நிலம் அளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுடைய மறுவாழ்வுக்கான அரசின் திட்டங்கள் நீண்டகாலமாக தாமதம் ஆவதை அடுத்து அதிருப்தியில் இருந்த காஷ்மீர் பண்டிட்டுகள் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் பதிவாளரிடம், இடம்பெயர்ந்தோருக்கான காஷ்மீரி குடியிருப்பாளர்கள் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், ஸ்ரீநகர் என்ற பெயரில் காஷ்மீர் பண்டிட்டுகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய இந்த சங்கத்தின் செயலாளர் சதீஷ் மஹல்தார், "தனிப்பட்ட டவுண்ஷிப் பகுதிகளில் தனிமையாக வாழ்வதற்கு பதில் குடிபெயர்ந்தவர்கள், இஸ்லாமிய மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான முயற்சிதான் இது,"என்றார். இந்த கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் 11 காஷ்மீர் பண்டிட்கள், 2 சீக்கியர்கள் உள்ளனர். 1989ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில சிறுமான்மையினருக்கு எதிராக கொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இவர்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்தனர்.
பண்டிட்களுக்கான மறுவாழ்வு தேர்தல் ஆதாயத்துக்கானதா?: இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மஹல்தார் ,"காஷ்மீருக்கு எங்கள் சமூகத்தினர் திரும்பியது குறித்து முழுவதும் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆதாயங்களுக்காக அரசியலாக்கப்பட்டது. எங்கள் சமூகம் திரும்பி வந்ததைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் கள அளவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு 419 குடும்பத்தினர் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு திரும்பி வருவதாக மத்திய அரசிடம் பட்டியல் தரப்பட்டது. ஆனால், அதன் பேரில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை," என்றார்.
மேலும் பேசிய அவர், "கடந்த 4-5 ஆண்டுகளாக இயல்பு நிலை திரும்பி விட்டதாக அரசு சொல்கிறது. எனவே நாங்கள் இப்போது முன்னர் நாங்கள் குடியிருந்த இடங்களுக்கு திரும்ப விரும்புகிறோம். ஆனால், எங்களில் பலர் அவர்கள் நிலத்தை, வீடுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே விற்று விட்டனர். ஆகவே ஏற்றவிலையில் அரசு நிலங்களை தர வேண்டும் என்று கோரி வீட்டு வசதி சங்கத்தை உருவாக்கி இருக்கின்றோம்.
உதாரணமாக, 12.5 ஏக்கர் நிலம் கேட்டிருக்கின்றோம். அதன் பின்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி மனைகளாக பிரிக்க வேண்டும். ஒரு சமுதாய கூடமும் அமைக்க உள்ளோம். இதனை இப்போது ஸ்ரீநகரில் தொடங்கி உள்ளோம். இதன் பின்னர் கிராமங்களிலும் இந்த திட்டத்தை விரிவு படுத்த உள்ளோம். அனைத்து சமூகங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த காஷ்மீரிகளை இதில் சேர்த்துக் கொள்கின்றோம்," என்றார்.
இதையும் படிங்க: அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு...நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசியது என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளத்தாக்கில் குறிவைத்து படுகொலைகள் நடைபெற்றதால் பெரும் அளவிலான காஷ்மீர் பண்டிட்டுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சூழலில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் மஹல்தார் நம்பிக்கையுடன் இருக்கிறார். “என்னுடைய வேர்களும் சடங்குகளும் இங்கேதான் இருக்கின்றன. நான் சங்கராச்சாரியார் கோவிலின் படிக்கட்டுகளில் ஏறுவதைப் போல, மக்தூம் சாஹிப்பின் சன்னதியையும் கட்டாயம் தரிசிக்க வேண்டும்” என்று மஹல்தார் கூறினார்.
அரசின் நடவடிக்கை: 2010ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் உயர் அதிகாரிகள் உட்பட 219 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், 62 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்டுகள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடங்களை அனாதையாக விட்டு விடடு தங்களின் பாதுகாப்புக்காக ஜம்மு, புதுடெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
தங்கள் வீடுகள் சூறையாடப்பட்டு அத்துமீறப்பட்டதாக காஷ்மீர் பண்டிட்கள் கூறினர். துயரத்துக்கு இடையே பலர் தங்கள் சொத்துக்களை விற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அரசின் சார்பில், கட்ந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது. இதில், புலம்பெயர்ந்தோர் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்தும் வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய நிர்பந்தம் செய்தது பற்றியும் புகாரளிக்க வழி செய்யப்பட்டது.
1997 ஆம் ஆண்டின் ஜம்மு மற்றும் காஷ்மீர் புலம்பெயர்ந்தோர் அசையாச் சொத்து (பாதுகாப்பு மற்றும் பேரிடர் விற்பனை மீதான கட்டுப்பாடு) சட்டம், அவர்களை "புலம்பெயர்ந்தோர்" என்று விவரிக்கிறது. பிரதமரின் வளர்ச்சி திட்டம் 2015ன் படி இடம் பெயர்ந்தோர் மீண்டும் திரும்புவதற்கு மத்திய அரசு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. பிரதமரின் மறுசீரமைப்பு திட்டம் 2008ன் கீழ் பள்ளத்தாக்கில் பண்டிட்களுக்காக 6000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி 5724 காஷ்மீர் பண்டிட்டுகள் வேலைகளில் நியமிக்கப்பட்டனர். காஷ்மீரின் தெற்கு, மத்திய பகுதி, வடக்கு பகுதிகளில் 6000 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்