ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாடகளாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கோலாகலமாக நடைபெற்றது. ஒட்டுமொத்த ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அதிகபட்சமாக 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புது வரலாறு படைத்தார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் கைப்பற்றப்பட்டார். அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் சோடை போயினர். அவர்களில் டாப் 5 வீரர்கள் குறித்து இங்கே காணலாம்.
IPL WILL MISS DAVID WARNER 💔
— Johns. (@CricCrazyJohns) November 25, 2024
- One of the all time greats, Davey.pic.twitter.com/5eu64C7oqG
டேவிட் வார்னர்:
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் முன்னணி வீரராக வலம் வந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இருப்பினும், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டும் 6 ஆயிரத்து 565 ரன்கள் குவித்து உள்ளார். இருப்பினும் டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டாதது ஆச்சரியம் அளிக்கிறது.
பிரித்வி ஷா:
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி பல்வேறு ஆட்டங்களில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரித்வி ஷா, இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக பிரித்வி ஷாவ வெளிப்படுத்திய மோசமான ஆட்டத் திறனே அவரை எடுக்காததற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே பிரித்வி ஷா அடித்துள்ளார்.
ஜானி பெர்ஸ்டோவ்:
டேவிட் வார்னருடன் இணைந்து இங்கிலாந்து வீரர் ஜானி பெர்ஸ்டோவ், சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் தொடக்க அரணாக இருந்தனர். கடந்த இரண்டு சீசன்களாக ஜானி பெர்ஸ்டோவ் பெரிய அளவில் சோபிக்காததே அவரை எந்த அணியும் எடுக்காததற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
ஷர்துல் தாகூர்:
கடந்த சில சீசன்களாக ஷர்துல் தாகூரின் சிறப்பான ஆல் ரவுண்டு ஆட்டத் திறனுக்காகவே அவரை அணிகள் போட்டி போட்டுக் கொண்டு கைப்பற்ற முயற்சித்தன. இருப்பினும் அவர் ஏலம் எடுக்கப்படாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
முஸ்தபிசுர் ரஹமான்:
2016ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் முக்கிய வீரராக விளங்கியவர் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்தபிசுர். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இருப்பினும், இந்த முறை அவரை யாரும் சீண்டாதது ஆச்சரியம் அளிக்கிறது.
இதையும் படிங்க: சென்னையில் தொடங்கிய பயணம்! ஐபிஎல்லின் இளம் கோடீஸ்வரர்! யார் இந்த வைபவ் சூர்யவன்சி!