ஐதராபாத்: சீனாவின் ஹூலுன்பியர் நகரில் 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி நேற்று (செப்.8) தொடங்கியது. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஜப்பானை இன்று (செப்.9) எதிர்கொண்டது.
அபாரமாக விளையாடிய இந்திய அணி போட்டியின் முடிவில் ஜப்பானை 5-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர்கள் போட்டி தொடங்கிய இரண்டு நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டு அசத்தினர். இரண்டாம் கால் சுற்று முடிவில் இந்திய அணி 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் கூட ஜப்பான் போடாததால் அந்த அணி அழுத்ததிற்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக கோல் திருப்ப ஜப்பான் வீரர்கள் கடும் முயற்சிகளை எடுத்த போதும் அது பலனளிக்கவில்லை. இந்திய வீரர்களின் நேர்த்தியான தடுப்பாட்டத்திற்கு மத்தியில் ஜப்பான் வீரர்கள் தோற்று தான் போயினர்.