ஹராரே: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் முறையே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.14) மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் இன்றைய ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது இந்திய அணியை பெரிதும் பாதிக்காது. அதேநேரம் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் தொடரை 3-க்கு 2 என்ற கணக்கில் நிறைவு செய்த திருப்தி அவர்களுக்கு கிடைக்கக் கூடும். ஜிம்பாப்வே அணியை பொறுத்தவரை பீல்டிங் மிகவும் மோசமாக உள்ளது.
மோசமான பீல்டிங் இந்திய வீரர்கள் கூடுதலாக 20 முதல் 30 ரன்களை எடுக்க உதவிகரமாக அமைகிறது. கேப்டன் சிக்கந்தர் ராஸா கடந்த நான்கு ஆட்டங்களிலும் அணிக்காக கடுமையாக போராடி வருகிறார். மற்றபடி தொடக்க வீரர்கள் மாதவெரே, மருமணி ஆகியோரின் ஆட்டம் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக கடந்த நான்கு ஆட்டங்களிலும் இந்திய வீரர்களின் பேட்டிங் ஸ்டைல் நன்றாக உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் நன்றாக விளையாடி வருகின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி வருகிறார். ரவி பிஷ்னாய், அவெஷ் கான் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணியும், அதேநேரம் ஆறுதல் வெற்றி பெற ஜிம்பாப்வே அணியும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க:டிஎன்பிஎல் 2024; சச்சின் அசத்தலால் நெல்லையை வீழ்த்தி கோவை அபார வெற்றி! - NRK vs LKK