ஹராரே: சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஜூலை.6) நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். மேலும் உலகக் கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளதால், ஜிம்பாப்வேக்கு சுப்மான் கில் தலைமையிலான இளம் படை விரைந்து உள்ளது.
இளம் படையாக இருந்தாலும் ஜிம்பாப்வேவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக் கூடிய வகையில் இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்கள். அதனால் ஜிம்பாப்வே வீரர்களுக்கு இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கடும் நெருக்கடி கொடுக்கும். மறுமுனையில் ஜிம்பாப்வே அணி சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் நிரம்பிய கலவையாக காணப்படுகிறது.