சென்னை: ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றில் கஜகஸ்தான் அணியை இந்தியா, 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரலாறு சாதனை படைத்துள்ளது.
இந்திய கூடைப்பந்து சங்கம் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இரண்டு போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் முதல் போட்டி நவ.23 நடைபெற்றது. இதில், நேற்று - திங்கட்கிழமை (நவ.25) நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 76வது இடத்தில் உள்ள இந்திய அணி, 69 வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.
முதல் கால்பகுதியில் கஜகஸ்தான் அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவிக்க தொடங்கியது. இந்திய அணியில் அமிஜோத் மற்றும் சஹாஜி தலா 3 புள்ளிகள் எடுத்தனர். கஜகஸ்தான் அணியும் 3 புள்ளிகள் எடுத்தனர். இருப்பினும், கஜகஸ்தான் வீரர்கள் 2 புள்ளிகள் அதிகம் எடுத்ததால் முதல் கால்பகுதியில் அந்த அணி 18-க்கு 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது கால்பகுதியில் சுதாரித்த இந்திய வீரர்கள், 3 புள்ளிகளை குவித்தனர். கன்வர் சந்து 3 புள்ளிகளை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரோடு சேர்ந்து கேப்டனும், தமிழ்நாட்டு வீரருமான ஹஃபீஸ் மற்றும் அமிஜோத் மேலும் 3 புள்ளிகளை குவிக்க இந்திய அணி 28 புள்ளிளை பெற்றது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, இரண்டாவது கால் பகுதியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. கத்தார் அணிக்கு எதிராக ரீ பவுண்ட் எடுக்க திணறிய இந்திய வீரர்கள், இந்த போட்டியில் அதிக ரீ பவுண்டுகள் எடுத்ததன் மூலமாக எதிரணியின் கவுண்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிந்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பிரனவ் 2 புள்ளிகளை எடுத்தார். இதனால் மூன்றாவது கால்பாதி முடிவில் இந்திய அணி 63-51 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து முன்னிலை பெற்றது.