ஐதராபாத்:இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு கெபெர்ஹா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக கடந்த 8ஆம் தேதி டர்பனில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (107 ரன்) சதம் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதம் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
முழு பார்மில் இந்தியா:
இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரில் இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் முழு பார்மில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் லேசாக சொதப்பிய அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில் பேட்டிங்கில் இந்திய அணி முழுமை பெற்றதாக காணப்படும். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
எளிதில் எடுக்கக் கூடாத தென் ஆப்பிரிக்கா:
அதேநேரம் தென் ஆப்பிரிக்க அணியை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சொந்த மண்ணில் எப்போது வேண்டுமானாலும் அந்த அணி முழு பார்முக்கு திரும்பும் என்பதால் இந்திய வீரர்கள் கடும் உஷாருடன் விளையாட வேண்டும். இன்றைய போட்டி நடைபெறும் மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணி ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.