ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நேற்று முன்தினம் (பிப்.15) குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும், சஃப்ராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்று (பிப்.16) அதாவது 2ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.17) போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஜோ ரூட் 18, ஜானி பேர்ஸ்டோவ் 0, பென் ஃபோக்ஸ் 13 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.