ஹைதராபாத்:இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிக்ஸர் மழை:அதன் படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, அதற்கு அடுத்த பந்திலே விக்கெட் இழந்து வெளியேறினார்.
இதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து வங்கதேசத்தை துவம்சம் செய்தனர். குறிப்பாக ரிஷாத் ஹொசைன் வீசிய 20 ஓவரில் சஞ்சு சாம்சன் 5 சிக்கர்களைப் பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி அவர் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 111 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்ஸர் 8 பவுண்டரி உட்பட 75 ரன் குவித்தார். தொடர்ந்து வந்த ரியான் பராக் 34 ரன்னும், ஹர்திக் பாண்டியா 47 ரன்னும் விளாசியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்துள்ளது.