தமிழ்நாடு

tamil nadu

"எங்களது திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை" - U19 இந்திய அணி கேப்டன் உதய் வருத்தம்!

Ind vs Aus U19 world cup: ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை எனவும், நாங்கள் மோசமான ஷாட்களை அடித்தோம் எனவும் இந்திய அணி கேப்டன் உதய் சஹாரன் கூறி உள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 2:18 PM IST

Published : Feb 12, 2024, 2:18 PM IST

Ind vs Aus U19 world cup
இந்திய அணி

பெனானி: ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று(பிப்.11) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 4வது முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது. இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணியிடம் சுருண்டது. முன்னதாக, இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 5 முறை கோப்பையை வென்றுள்ளது, ஆஸ்திரேலியா அணி 4 முறை வென்றுள்ளது.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் உதய் சஹாரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த போட்டியில் எங்களது வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். நாங்கள் இன்று சில மோசமான ஷாட்களை அடித்தோம்.

எங்கள் திட்டங்களை இந்த போட்டியில் செயல்படுத்த முடியவில்லை எனக் கூறினார். இந்த போட்டி மூலம், தானும் தனது அணியும் நிறையக் கற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேற முயற்சி எடுப்போம்" என்று கூறினார்.

பின்னர், ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஹக் வெய்ப்ஜென் கூறுகையில், "ஆஸ்திரேலியா அணி வீரர்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். எங்களது திட்டம் சில ரன்களை எடுத்த பின்புதான் பின் வாங்க வேண்டும் என்று இருந்தது. ஹர்ஜாஸ் சிங் இந்த போட்டியில் 55 ரன்களை குவித்தார்.

இதை நினைத்து பெருமிதம் அடைகிறேன் . மேலும், இந்தியா ஒரு கிளாஸ் சைட் , முழு போட்டியிலும் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சிறந்த விசயங்களைச் செய்வார்கள் என நம்புகிறேன்" என்று கூறினார்.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும், அவர்களின் பயணம் அழியாத உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உதய் சஹாரன் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றது, செளமி பாண்டே சுழற்பந்து வீசியது, மூஷீர் கான் பயமின்றி பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டது, ராஜ் லிம்பானி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தது என எல்லோரும் இணைந்து தங்களது திறமையை வெளிப்படுத்திச் சிறப்பாக விளையாடினர்.

இந்திய அணிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி..! மேக்ஸ்வெல் சதம் விளாசி அசத்தல்..!

ABOUT THE AUTHOR

...view details