சென்னை: இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (செப்.11) துவங்கி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபால், வங்கதேசம், மாலத்தீவு என 7 நாடுகளிலிருந்து 28 வகையான விளையாட்டுகளில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் அனைத்தும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் இருந்து 62 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 9 பேர் பங்கேற்று உள்ளனர். சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு தடகள சங்கம் சர்வதேச தொடரை மீண்டும் நடத்துகிறது. 1995ஆம் ஆண்டு கடைசியாக சர்வதேச தடகள தொடர் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியினை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "செஸ் ஒலிம்பியாட், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர், ஸ்குவாஷ் உலகக்கோப்பை என கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சர்வதேச மற்றும் தேசிய நிகழ்வுகளை நடக்கும் விளையாட்டு மையமாகத் தமிழ்நாடு இருக்கின்றது. விளையாட்டுத்துறையை இந்தியாவில் முன்னணி துறையாகக் கொண்டு வருவதற்காக முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதையும் படிங்க: ஐபிஎலில் இருந்து தோனி ஓய்வு? ட்விட் மூலம் உறுதிப்படுத்திய சென்னை!
அந்த வகையில் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்காக ரூ.3 கோடியே 67 லட்சம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக வேலைவாய்ப்பில் 3 சதவிகித அரசு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டையும் தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கின்றது. அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள் உருவாக்கத் திட்டமிட்டு இருக்கின்றது. ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் சர்வதேச தரத்தில் பல்வேறு விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது" எனத் தெரிவித்தார்.
தமிழக வீராங்கனை தங்கம்: அதையடுத்து நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது. மேலும், தமிழக வீராங்கனை அபிநயா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.72 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இத்தொடக்க விழாவில், ஆசிய தடகள கூட்டமைப்பின் தலைவர் தாஹாலன் ஜுமன் அல்-ஹமத், தெற்காசிய தடகள கூட்டமைப்பின் தலைவர் லலித் கே பனோட், மற்றும் இளைஞர் நலன் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்மேகனாத ரெட்டு, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.