ஓமன்:ஆசிய நாடுகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் (Emerging Teams Asia Cup) டி20 கிரிக்கெட் வடிவத்தில் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியை குரூப் பி- பிரிவில் இடம் பெற்றுள்ளன. குரூப்-ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும்.
அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனை தொடர்து இன்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில் யுஏஇ அணியை எதிர் கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 16.5 ஓவர்கள் விளையாடிய அந்த அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ராகுல் சோப்ரா 2 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக யுஏஇ கேப்டன் பசில் ஹமீத் 22 ரன் மற்றும் மயங்க் குமார் 10 ரன் எடுத்தார்கள்.