அமெரிக்கா:டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 13வது லீக் போட்டியில் 'குரூப் - ஏ'வில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து -கனடா அணிகள் மோதின.
நியூயார்க் நகரின் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கியது கனடா. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால் களமிறங்கினர்.
இதில் நவ்நீத் தலிவால் 6 ரன்னிலும், ஆரோன் ஜான்சன் 11 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய பர்கத் சிங் 18 ரன்னிலும், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் 50 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது கனடா. பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் கிர்டன்-ஷ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்த அணியை மீட்டனர்.
இதில் நிக்கோலஸ் கிர்டன் 35 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகள் என 49 விளாசி இருந்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார். மற்றொரு பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் 37 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் குவித்தது கனடா அணி. அயர்லாந்து அணி தரப்பில் கிரைக் யங், பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 138 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து. தொடக்க ஆட்டகாரர்களாக ஆண்டிரூ மற்றும் கேப்டன் பால் ஸ்டார்லிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பால் ஸ்டார்லிங் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆண்டிரூ 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டக்கர் 10 ரன்னிலும், ஹெரி 7 ரன்னிலும், கேம்ஹர் 4 ரன்னிலும், ஹரித் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து அணி. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்திய கனடா, 'குருப் ஏ' பிரிவில் 3வது இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:T20 World Cup 2024: பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்க அணி கடந்து வந்த பாதை!