ஐதராபாத்: இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதலில் வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் மற்றும் நிலவும் வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து அங்கு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பையை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.
முன்னதாக இந்தியாவில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டது. ஆனால் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவிக்கவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் ஐசிசி கோப்பைகளை நடத்துவது மற்றும் தற்போது இந்தியாவில் மழைக் காலம் என்பதை காரணம் காட்டி பிசிசிஐ தட்டிக் கழித்தது.