ஐதராபாத்:அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடரை நடத்த தேவையான பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கறாராக தெரிவித்துள்ளது.
இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பையை நடத்த முடியாத சூழல் நிலவும் நிலையில், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதேநேரம், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தானை பல்வேறு வகைகளில் சரிகட்ட ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கும் பட்சத்தில் பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை வழங்குவதாக ஐசிசி உத்தரவாதம் அளித்ததாக தகவல் கூறப்படுகிறது.