ஐதராபாத்: பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கராச்சி, ராவல்பின்டி மைதானங்களில் போட்டிகளை நடத்தும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இருப்பினும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே இதுவரை நேரடி விளையாட்டு தொடர்கள் இதுவரை நடக்கவில்லை.
ஐசிசி மற்றும் பொது அமைப்புகள் நடத்தும் விளையாட்டு தொடர்களில் மட்டுமே இரு நாடுகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இந்திய அணியை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட வைக்க பாகிஸ்தான் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் இந்தியா விளையாடும் போட்டிகளை மற்றும் ஹைபிரிட் மாடலில் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், அதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் நிலையில் இல்லை. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை கைவிட திட்டமிடும் சூழலுக்கு ஐசிசி தள்ளப்பட்டது.
அதேநேரம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் முடிவை பாகிஸ்தான் அணி திரும்பப் பெறுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியதாக தகவல் பரவி வருகிறது. இந்த சூழலை புரிந்து கொண்டு பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அல்லது தொடரை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவுக்கு இசைய வேண்டுமென ஐசிசி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஹபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்காவில் நடத்த பேச்சுவாரத்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஹைபிரிட் மாடலில் இலங்கையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Top 10 Controversies of Ind vs Aus Test: டாப் 10 இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸ் சர்ச்சைகள்!