திருப்பூர்: திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சத்ய நாராயணன் என்ற மாணவன், கோவை தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் (ஜனவரி 3) இரவு தனது பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது அறையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
காலையில் மகன் வெகுநேரமாக அறை கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர், அரைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது உயிரிழந்த சத்ய நாராயணனின் செல்ஃபோனில் பதிவான ஆடியோ ஒன்றை கைப்பற்றி உள்ளனர். அதில், சத்ய நாராயணன், தமது ஆசிரியை ஒருவரிடம் சக மாணவர்கள் தன்னை தாக்குவதாகவும், அவர்களை கண்டால் அச்சமாக இருக்கிறது எனவும் அதனால் மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளதாகவும், அவர்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என பயமாக இருக்கிறது என்றும் மனஉளைச்சலில் வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்கிறேன்” என்று அழுகுரலில் பேசுவதைப் போன்ற ஆடியோ இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் மனுக்களை இப்போது விசாரிக்க முடியாது - கோர்ட்..!
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்த மாணவனின் பெற்றோர் கூறுகையில், “மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்களாக ஆடியோவில் கூறப்படும் மாணவனையும் அவரது நண்பர்கள் மூவரையும் கைது செய்ய வேண்டும்” என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரியில் சக மாணவர்களிடையே ப்ராங்க் கால் செய்ததால் பிரச்னை ஏற்பட்டு அடிதடி நடந்தாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.