ஐதராபாத்:18வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் கடந்த நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அதிக தொகைக்கு ஏலம் போய் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புது சாதனையே படைத்தார்.
ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி கைப்பற்றியது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக வெங்கடேஷ் ஐயரை 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இப்படி வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாயில் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும், அவர்கள் எடுக்கப்பட்ட தொகையே ஊதியமாக வழங்கப்படுமா என்றால் கிடையாது. வரி உள்ளிட்ட பிடித்தங்கள் போக குறிப்பிட்ட தொகை மட்டுமே அவர்களை சென்றடையும், அந்த வகையில் இரண்டாவது அதிகபட்ச தொகையான 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வளவு தொகையை கையில் பெறுவார் என்பது குறித்து இங்கே காணலாம்.
இந்திய அரசின் வருமான வரிச் சட்ட விதிமுறைகளின் படி 15 லட்ச ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் அனைவரும் அதில் இருந்து 30 சதவீதத்தை அரசுக்கு வருமான வரியாக செலுத்த வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அவர் 8 கோடியே 2 லட்ச ரூபாயை வரியாக செலுத்த வேண்டும்.