அகமதாபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவது பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.28) மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். விருத்திமான் சஹா 5 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து சுப்மன் கில் 16 ரன்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து சாய் சுதர்சன், ஷாருக்கான் ஆகியோர் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு திருப்பி இருவரும் துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக விளையாடிய ஷாருக்கான் அரைசதம் கடந்து அணியின் ரன் வேகத்தை சீரான இடைவெளியில் உயர்த்தினார்.
இறுதியில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஷாருக்கான் (58 ரன்) அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய டேவிட் மில்லர் சாய சுதர்சனுடன் இணைந்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். அபாரமாக விளையாடி சாய் சுதர்சன் சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி அணியின் 200 ரன்கள் எட்ட உறுதுணையாக இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 4 சிக்சர் 8 பவுண்டரி விளாசி 84 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அவருக்கு பக்கபலமாக டேவிட் மில்லர் 26 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டும் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூரு அணி நீடிக்க முடியும் என்பதை உணர்ந்து அந்த அணி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:டாஸ் வென்று பெங்களூரு பந்துவீச்சு தேர்வு! உள்ளூரில் சாதிக்குமா குஜராத்! - IPL 2024 GT Vs RCB Match Highlights