சென்னை: இனிவரும் காலங்களில் அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்த ஓபிஎஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக விஜயுடன் பயணிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு கொக்கி போட்டு கேள்வி கேட்கிறீர்களா? என சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (டிசம்பர் 1) மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "கட்சியிலிருந்து நீக்கப்படுவது விதிமுறை மீறல் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். அடுத்து அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
இதையும் படிங்க: "அரசுப் பள்ளிகளை தத்தெடுப்போம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை" - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதிமுக தொண்டர்களின் உரிமையை எம்ஜிஆர் ஏற்கனவே நிர்ணயம் செய்து உறுதி செய்துள்ளார். எம்ஜிஆரின் இதயத்தில் இருந்து எழுந்துள்ள அந்தக் கோரிக்கை உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்முறை விவகாரம்:
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்ததை போன்ற துயர சம்பவங்கள் இனிமேலும் தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க தடுக்கப்பட அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
தவெக விஜயுடன் கூட்டணியா?:
தவெக தலைவர் விஜய் தனியாக தனிக்கட்சி ஆரம்பித்துள்ளார். அவருடைய எதிர்கால இலக்கு எதை நோக்கிச் செல்கிறது என்பதைப் பார்த்த பின்பு தான் அவரைப் பற்றிய கருத்துக்களை உறுதியாகக் கூற முடியும் என்றார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயோடு கூட்டணி அமைத்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, சிரித்துக் கொண்டே கடைசியாக ஒரு கொக்கியைத் தூக்கி போட்டு கேள்வி கேட்கிறீர்களே" என்று கூறிவிட்டு, வேறு எதுவும் கூறாமல் அக்கேள்வியைப் புறக்கணித்துச் சென்று விட்டார்.