ஹைதராபாத்:பாரீஸில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 53வது இடத்தில் உள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியா வென்ற 3 பதங்கங்களுமே துப்பாக்கி சுடுதல் பிரிவில் இருந்துதான் என்பதாகும்.
முதலில் கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் ஒற்றையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று, இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற கணக்கில் கொரிய இணையை வீழ்த்தி பதக்கம் வென்று சாதித்தது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
யார் இந்த சரப்ஜோத் சிங்?ஹரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சரப்ஜோத் சிங். இவரின் தந்தை ஜிதேந்தர் சிங் விவசாயி, தாயார் ஹர்தீப் கொளர். சண்டிகரில் உள்ள கல்லூரியில் படிப்பை முடித்த சரப்ஜோத், அபிஷேக் ராணா என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
8 வருட உழைப்பு:இந்நிலையில், வெண்கலம் வென்ற நாயகன் சரப்ஜோத் சிங் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்தியாவிற்காக பதக்கம் வென்றதில் பெரும் மகிழ்ச்சி. இதற்காக கடந்த 8 வருடங்களாக கடினமாக முயற்சி செய்துள்ளேன். இருப்பினும், பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் என்னுடைய செயல்திறன் திருப்தி அளிக்கவில்லை. இதற்காக இன்னும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.