சென்னை: தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருநது காணொளிக்காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிமுகவுக்கு புதிய அலுவலகம் கட்ட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக எம்.ஆர்.சாலை, செக்டார் ஆறுக்கு உட்பட்ட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 13,020 சதுர அடியில் தரைதளம் மற்றும் மூன்றடுக்கு மாடியுடன்கூடிய புதிய கட்டிடத்தை கட்டும் பணிகள், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2015 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அதிமுகவின் புதிய அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) February 10, 2025
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா மாளிகையை
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக தனது பொற்கரங்களால் திறந்துவைத்தார்கள்.… pic.twitter.com/Ppvx45SRXl
இந்த அலுவலகத்துக்கு 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர் -புரட்சித் தலைவி அம்மா மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி, செல்லூர் ராஜு, டி.ஜெயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேறறனர். பொள்ளாச்சி வி.ஜெயராமன், தமிழ்மகன் உசேன், எஸ்.செம்மலை, சி.பொன்னையன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் புதிய அலுவலகம் திறப்பை கொண்டாடப்படும் வகையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
2015 இல் டெல்லியில் கட்சி அலுவலக பணிகள் துவங்குவதற்கு முன்பாக, 2012 பிப்ரவரி 21 ஆம் தேதி, அதற்கான 10,850 சதுர அடி இடத்தை மத்திய அரசு, கட்சி நிர்வாகத்துக்கு மாற்றி கொடுத்தது என்று அதிமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.