ஹைதராபாத்:பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2 வெண்கல பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த வீராங்கனை மனு பாக்கார் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து உங்கள் கருத்து?வினேஷ் போகத் ஒரு சிறந்த வீராங்கனை. அவர் தனது வாழ்க்கையில் பல விஷயங்களில் போராடியுள்ளார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை தோல்வியடைந்தாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் மனம் தளரவில்லை. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து எனக்கு முழுவதுமாக தெரியாது.
இருப்பினும் வினேஷ் போகத்துக்கு நேர்ந்ததைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவர் என் சகோதரி போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எந்த சூழ்நிலையிலும் நாம் சண்டையிடுவதை மட்டும் நிறுத்தக் கூடாது என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
டோக்கியோ ஒலிம்பிக் குறித்து?டோக்கியோ ஒலிம்பிக் எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. இருப்பினும் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வர நான் மிகவும் சிரமப்பட்டேன். அப்போதுதான் எனக்குள் ஒரு முழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதுதான் (Still I Rise) நான் மீண்டும் எழுவேன் என்ற அந்த முழக்கம் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.
பயிற்சி நேரத்தை தவிர மற்ற நேரங்களில் என்ன செய்வீர்கள்?எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய பயணத்தின் போதும் சரி அல்லது மற்ற நேரங்களில் நான் பெரும்பாலும் பாடல்களைக் கேட்பேன். அது என் மனதை அமைதிப்படுத்தும். அதே போல் தினமும் பகவத்கீதையை படிப்பேன். நான் சிறு வயதிலிருந்தே உறங்குவதற்கு முன் குறைந்தது ஒரு ஸ்லோகமாவது படித்துவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறோன்.
ஒலிம்பிக்கில் 3 போட்டிகளில் பங்கேற்றது உங்களுக்கு கடினமாக இல்லையா?எப்போதும் நாம் கடினமாக உழைப்பதை பற்றித்தான் யோசிக்க வேண்டும். அதைத் தவிர முடிவு எப்படி வரும் என்பதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது. நான் 3 விதமான போட்டிகளுக்குதான் பயிற்சி பெற்றேன், அதனால் எனக்கு எந்த ஒரு அழுத்தமும் ஏற்படவில்லை.
துப்பாக்கி சுடுதல் குறித்து உங்கள் அனுபவம்?பொதுவாக துப்பாக்கி சுடுதல் போட்டி என்றால் மிகவும் எளிதானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. எந்த ஒரு விளையாட்டிற்கு சில மணி நேரப் பயிற்சி என்பது அவசியமான ஒன்று, அதற்கு உடல் தகுதி அவசியம்.
இதனை தொடர்சையாக நாம் செய்யும் போது சில காயங்கள் ஏற்படும். கடந்த ஆண்டு எனது தோள்பட்டை தசைகளில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு முழங்கை, முழங்கால், இடுப்பு என பல காயங்கள் ஏற்பட்டுன. இது உடல் அளவில் மட்டும் அல்லாமல் மனதளவிலும் என்னைப் பாதித்தது" என்று மனு பாக்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்த முறை 25 பதக்கம்! பாரீஸ் புறப்பட்ட இந்திய பாராலிமிபிக் அணி! எந்தெந்த போட்டிகளில் பதக்க வாய்ப்பு?