பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் வாள்வீச்சு போட்டியின் சாப்ரே பிரிவில் ரவுன்ட் ஆப் 16 ஆட்டத்தில் எகிப்து வீராங்கனை நடா ஹபீஸ், தென் கொரியாவை சேர்ந்த ஜியோன் ஹயோங் என்பவரை எதிர்கொண்டார்.
நாக் அவுட் ஆட்டத்தின் முடிவில் நடா ஹபீஸ் தோல்வியை கால் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டார். இந்நிலையில், போட்டியின் போது தான் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக நடா ஹபீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவில், "களத்தில் இரண்டு பேர் மட்டுமே விளையாடியதாக உங்களுக்கு தெரியலாம்.. ஆனால் அங்கு நாங்கள் முன்று பேர் இருந்தோம்.
நான், எனது எதிரணி வீராங்கனை மற்றும் விரைவில் உலகை காண உள்ள எனது குட்டிக் குழந்தை. உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எங்களின் சவால்களில் நியாயமான பங்கு எனக்கு இருந்தது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கர்ப்பத்தின் ரோலர் கோஸ்டர் தானே கடினமானது, ஆனால் வாழ்க்கை மற்றும் விளையாட்டுகளின் சமநிலையை பராமரிக்க போராடுவது கடினமானது அல்ல, இருப்பினும் அது மதிப்புக்குரியது, 16-வது சுற்றில் எனக்கான இடத்தை பெற்றது பெருமைப்படுகிறேன் என்பதை சொல்லவே இந்தப் பதிவை எழுதுகிறேன்" என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
முன்னதாக மகளிர் தனி நபர் தகுதிச் சுற்றில் நடா ஹபீஸ், அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய நடா ஹபீஸ் 15-க்கு 13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டு எகிப்து தேசிய சீனியர் மகளிர் சபரே வாள்வீச்சு அணியில் இணைந்த நடா ஹாபீஸ் இதுவரை மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.
இதற்கு முன் 2016 ரியோ ஒலிம்பிக்கிலும், அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அவர் பங்கேற்று இருந்தார். தற்போது 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்றார்.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: பிவி சிந்து அபார வெற்றி! அடுத்த சுற்று என்ன? - Paris Olympics 2024