ஐதராபாத்: பாகிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற பொருளாதாரம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை விட்டு வைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த அளவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது என்றால் கடந்த 4 மாதங்களாக வீரர் வீராங்கனைகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
வீரர், வீராங்கனைகளுக்கு 23 மாத ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்கி வருகிறது. அதன் படி கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரர், வீராங்கனைகளிடம் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒவ்வொரு 12 மாதத்திற்கு ஒரு முறை இந்த ஒப்பந்தம் என்பது மறு ஆய்வு செய்யப்படும்.
ஆடவர் அணியில் 25 வீரர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவிலும் இதே 23 மாத ஒப்பந்த விதிகளே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் வீராங்கனைகளிடம் ஊதிய ஒப்பந்தம் குறித்து எந்த வித ஆவணமும் கையெழுத்தாகவில்லை எனக் கூறப்படுகிறது.