ஐதராபாத்: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவரது பணி தொடரும் என ராஜஸ்தான் ராயலஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியின் கீழ் இந்திய அணி அண்மையில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வீரர்கள் மெகா ஏலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், தொடர்ந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் மற்றும் ஆலோசகராக பணியாற்றினார். அதன்பின் 2016ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போதைய டெல்லி கேபிட்டல்ஸ்) அணிக்கு மாறிய ராகுல் டிராவிட், 2019ஆம் ஆண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை அங்கேயே இருந்தார்.