ஐதராபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சிரகமான அறிவிப்பாக அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டது வெளியானது.
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டதில் அவரது குடும்பத்தினர் அளவு கடந்த உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட்டின் தந்தை தசரத் கெய்க்வாட் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமனம் செய்யப்படுவதைப் பற்றி நாங்கள் உறுதியாக இருந்தோம்.
அந்த தருணம் எப்போது வரும் என்று தெரியவில்லை என காத்திருந்தோம். இருப்பினும், அவருக்கு இவ்வளவு சீக்கிரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் ருதுராஜ்க்கு மிகப் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது.
ஒரு அணிக்கு கேப்டனாக இருக்கும் போதெல்லாம், விளையாட்டில் ருதுராஜின் ஈடுபாடு என்பது அதிகரிக்கிறது மற்றும் அதிக கவனம் செலுத்துகிறார். இதுவரை ருதுராஜ் செய்த காரியங்கள் எதற்காகவும் அவரை பாராட்டியதில்லை. அவர் சிறப்பாக செயல்படும் போதோ அல்லது அவரது அணிக்காக கோப்பையை வென்றாலோ, நாங்கள் அதைப் பற்றி அதிகமாக கூட விவாதித்தது இல்லை.
நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு அவனால் என்ன சாதிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதுதான் கவனமாக இருந்தது" என்றும் தசரத் கெய்க்வாட் தெரிவித்தார். நாளை (மார்ச்.22) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக மைதானத்தில் வளம் வரும் ருதுராஜ் கெய்க்வாட்டை காண அவரது மனைவி மற்றும் அம்மாவுடன் சென்னைக்கு செல்ல உள்ள தசரத் கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.
27 வயதான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இந்திய அணி கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் தர டி20 கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா அணி மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உள்ளது.
42 வயதான தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி அந்த இடத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட்டை பரிந்துரைத்ததாக தகவல் கூறப்படுகிறது.
முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டன் நியமிக்கபட வாய்ப்பு உள்ளதாக அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தோனி இன்னும் 2 அல்லது மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க :ஐபிஎல் தொடக்க விழா: களைகட்டும் ஏஆர் ரஹ்மானின் கலை நிகழ்ச்சி! அக்ஷய் குமார், டைகர் ஷெராப் பங்கேற்பு! - IPL 2024 Opening Ceremony