சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று (மே.1) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 49வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சென்னை அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரஹானே ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக ரன்கள் இல்லை. 2வது ஓவரில் கேப்டன் ருதுராஜ் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தனர்.
ரன்கள் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவர் ஃப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் ரஹானே தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக விளையாடிய ரஹானே, ரோசோவிடம் (Rossouw) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், களம் கண்ட ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் எல்பிடபிள்யூ ஆகினர். பின், சமீர் ரிஸ்வி களம் கண்டார். 10 ஓவர் முடிவிற்கு சிஎஸ்கே அணி 71-3 என்ற கணக்கில் விளையாடியது.
ரபாடா வீசிய பந்தில் சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்க, மொயின் அலி களம் கண்டார். இதனிடையே, சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் கெய்க்வாட் போல்ட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளுக்கு 62 ரன்களைக் குவித்தார்.
பின் தோனி களமிறங்க, மொயின் அலி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி திணற, 20வது ஓவரின் கடைசி பந்தில் தோனி ரன் அவுட் ஆனார். தோனி 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தோனி ரன் அவுட் ஆவது இதுவே முதன்முறையாகும். 20 ஓவர் முடிவிற்கு, 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்தது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களும், ரஹானே 29 ரன்களும், ரிஸ்வி 21 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹார் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ரபாடா ஆகிய இருவரும் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க:டி 20 உலகக் கோப்பை தொடரில் நடராஜன் ஏன் இடம் பெறவில்லை: தேர்வு குழுவுக்கு நடிகர் சரத்குமார் வைத்த கோரிக்கை! - Sarathkumar On Natarajan