தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: உலக அரங்கில் சாதிக்கத் தயாராகும் சென்னை வீரர்கள்!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதால் உலக சாம்பியன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது என தொடரின் இயக்குனர் ஸ்ரீநாத் நாராயணன் தெரிவித்துள்ளார்.

chennai grand master chess Srinath Narayanan about chennai chess players
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷி தொடரின் இயக்குனர் ஸ்ரீநாத் நாராயணன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 8:33 AM IST

Updated : Nov 8, 2024, 12:43 PM IST

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் இரண்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் குறித்து இந்திய அணியின் ஒலிம்பியாட் தொடர் பயிற்சியாளரும், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரின் இயக்குனர் ஸ்ரீநாத் நாராயணன் ஈடிவி பாரத் செய்திக்கு சில பிரத்யேகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் குறித்து பேசிய ஸ்ரீநாத் நாராயணன், “நம் நாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான், கடந்தாண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் ஆரம்பித்ததன் நோக்கம். 2023ஆம் ஆண்டு நாம் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவில் இது போன்ற போட்டிகள் எங்கும் நடைப்பெற்றது இல்லை.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. செஸ் தொடர்கள் வெளி நாடுகளில் நடைபெறுவதால், அந்த நாட்டின் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெளிநாடுகளில் இது போன்ற போட்டிகள் நடைபெற்றால் இந்தியா நாட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றதால், கேண்டிடேட் தொடரில் வெற்றி பெற்று தற்போது உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கத் தயாராக இருக்கிறார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பலமாக இருக்கிறோம். கடந்த ஆண்டில் குகேஷ் எந்த நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் தான் இந்த ஆண்டு அர்ஜுன் எரிகேசி இருக்கிறார்.

அர்ஜுன எரிகேசி FIDE தொடரில் கூடுதல் புள்ளிகளுடன் இருக்கிறார். இந்த தொடரில் வெற்றி பெற்றால், கேண்டிடேட் தொடரில் பங்கேற்பதற்கு நல்வாய்ப்பாக இருக்கும். தற்போது நடைபெற்றிருக்கும் தொடரில் அர்ஜுன் எரிகேசி வெற்றி பெற்று கேண்டிடேட் தொடரையும் வென்றால் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக சாம்பியன் தொடரில் குகேஷுடன் கூட போட்டி போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டு சேலஞ்சர்ஸ் தொடரையும் இதில் சேர்த்து இருக்கிறோம். ஏனென்றால் வளர்ந்து வரும் வீரர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதால் அந்த தொடரை சேர்த்திருக்கிறோம். தமிழ்நாட்டில் சிறந்த வீரர்களும் அதில் பங்கேற்றுள்ளனர். அதில் முக்கியமாக சர்வதேச அளவில் முதல் 25 இடங்களுக்குள் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்திற்கு இந்த தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

சேலஞ்சர்ஸ் போட்டியில் பங்கேற்கும் 8 வீரர்களில், 4 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் குறிப்பாக பிரணவ் பிரனேஷ் உள்ளிட்ட 20 வயது குறைவான வீரர்களும் அதில் அடங்கியுள்ளார்கள். குறிப்பாக கார்த்திகேயன் முரளி மற்றும் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் என்ற வைஷாலியும் இதில் பங்கே இருக்கிறார்கள், அவர்கள் இதுபோன்ற தொடரில் பங்கேற்பதின் மூலமாக அவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் வெற்றி பெற்றால் 24.5 புள்ளிகள் கிடைக்கும். தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் அர்ஜுன் எரிகேசி ஏற்கனவே கூடுதல் புள்ளிகளுடன் உள்ளார். அவர் சென்னை செஸ் தொடரில் வெற்றி பெற்று புள்ளிகளை பெற்றால் முதன்மை பெறுவார்.

டிசம்பர் மாதத்துடன் FIDE கேன்டிடேட் தொடரின் போட்டிகள் முடிகிறது. அர்ஜுன் எரிகேசி இந்த கூடுதல் புள்ளிகளை பெற்றால் மற்ற வீரர்கள் அவரை முந்தி செல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.எனவே அர்ஜூன் எரிகேசி கேண்டிடேட் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பல நாட்டு வீரர்களை விட தமிழ்நாட்டு வீரர்கள் அதிக புள்ளி மதிப்பை பெற்றுள்ளனர்.

குறிப்பாக இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாட்டு வீரர்கள் மட்டுமே 2700 புள்ளிகளை பெற்றுள்ளனர். உலக நாடுகளை ஒப்பிடும்போது, சென்னையில் இருந்தே ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியும். ஏனென்றால் 2700 புள்ளிகளை புள்ளிகளை பெற்ற வீரர்கள் சென்னையில் அதிகம் இருக்கின்றனர். குறிப்பாக விசுவநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் உலகின் சிறந்த செஸ் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள்.

கடந்த முறை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்தேன். முக்கியமாகத் தொடரில் அணிக்கு கூடுதலாக பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால், அந்த வீரர்கள் அனைவரும் திறமை வாய்ந்த வீரர்களாக இருந்தனர். இருந்தாலும் அந்த தொடரில் பங்கேற்பதற்கு அவர்களுக்கு மனதளவில் ஏற்படக்கூடிய தடைகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை அவர்களிடம் வராமல் பார்த்துகொள்ள நினைத்தேன். அப்படியே செய்து நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான முடிவு அந்த தொடரில் எங்களுக்கு கிடைத்தது.

ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை தொடரில் யாரையும் வழிநடத்த முடியாத சூழல் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் ஒரே அணியை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, இந்த தொடரின் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே தற்போது இருக்கிறேன். உலகம் தரம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதன் வாயிலாக, அவர்களுடன் நம் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுவதால் நல்ல அனுபவம் கிடைக்கிறது.

ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலே, நம் வீரர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் தொடரில் குகேஷ் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த வருடம் ஒலிம்பியாட் தொடரை வென்றுள்ளார். இதேபோல வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் சிறந்த வீரர்களாக வருவார்கள்,” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

Last Updated : Nov 8, 2024, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details