டெல்லி:பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம் முடிவு காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் உத்தரவை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். முதலில் தகுதி நீக்கம் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வினேஷ் போகத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று வினேஷ் போகத் முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நடுவர் நீதிமன்றம், இன்று இன்று 9.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தீர்ப்பு 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பானது ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் துணைத் தலைவர் அபினவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த முக்கியமான ஒன்று தாமதமாகும்போது அதன் வலி நமக்கும் எப்படி இருக்கும் என்று தெரியும். அதேபோல், தான் இன்று வினேஷ் போகத் CAS தீர்ப்புக்காக காத்திருக்கும் போது தீர்ப்பு தள்ளிப்போனது அனைவருக்கும் வலியைக் கொடுத்துள்ளது.
ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒலிம்பிக் நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடக்கக் கூடியது. மேலும், வீரர்கள் இதுபோன்ற சிக்கலை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். விளையாட்டு என்பது மைதானத்தில் நடப்பது மட்டுமல்ல. அது காத்திருப்பு, பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றை பற்றியது. ஆகஸ்ட் 16ஆம் தேதிக்காக நாம் காத்திருப்போம்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு! வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? டெல்லி விரையும் வினேஷ் போகத்! - Vinesh Phogat case verdict